நெஞ்சக சளியை கரைக்கும் தூதுவளை

நெஞ்சக சளியை கரைக்கும் தூதுவளை




நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

அந்தவகையில், நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும் தூதுவளை, உடலுக்கு பலம் தரும் முருங்கை பூ ஆகியவற்றின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தூதுவளை.

இது, நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ள கூடியது. சளியோடு ரத்த கசிவு பிரச்னையை போக்குகின்ற அற்புதமான மருந்தாகிறது. ஈரலுக்கு பலம் தரக்கூடியதாக விளங்குகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. உடலுக்கு பலம் தரக்கூடியதாக விளங்குகிறது. அன்றாடம் உண்ணக்கூடிய சில மூலிகைகளில் இதுவும் ஒன்று. ஆயுளை வளர்க்க கூடியது.
தூதுவளையை பயன்படுத்தி நுரையீரல், கல்லீரலை பலப்படுத்தும் ரசம் தயாரிக்கலாம்.

 பொருட்கள்: தூதுவளை, நல்லெண்ணெய், பெருங்காயம், கடுகு, வரமிளகாய், பூண்டு, தக்காளி, மிளகு, சீரகம், புளி, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் சிறிது பெருங்காயம், கடுகு, வரமிளகாய், தூதுவளையின் இலை மற்றும் பூக்களை சேர்த்து வதக்கவும். இதில், பூண்டு பற்கள் தட்டி போடவும். சிறிது தக்காளி, மிளகுத்தூள், சீரகத்தூள், புளிகரைசல் சேர்க்கவும். இதில், நீர்விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை குடித்துவர நுரையீரல், கல்லீரல் பலம் பெறும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட தூதுவளை ஊதா நிற பூக்கள், முட்களை கொண்டது. உள் உறுப்புகளை தூண்டுகிறது. நுரையீரலை சுத்தம் செய்கிறது. நெஞ்சக சளியை வெளியேற்றும் நல்மருந்தாக விளங்குகிறது. முருங்கை பூக்களை பயன்படுத்தி உடலுக்கு பலம் தரும் துவையல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ, நெய், பெருங்காயப்பொடி, உளுந்தம் பருப்பு, புளி, வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உறுகியதும் பெருங்காய பொடி, உளுந்தம் பருப்பு, சிறிது புளி, முருங்கை பூ, வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு பற்கள், உப்பு சேர்த்து வதக்கி அரைத்து எடுக்கவும்.

இந்த துவையலை சாப்பிட்டுவர உடல் பலம் பெறும். பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை அற்புதமான உள் மருந்தாகிறது. இதன் இலை, காய்கள், காய், பட்டை, பூ, விதை, வேர், பசை ஆகியவை பயன்தருகிறது. புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது முருங்கை பூ. இது, உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. பால் பெருக்கியாக விளங்குகிறது. தொடர்ந்து ஏற்படும் விக்கலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்: நெல்லி சாறு, தேன். விக்கல் காரணமாக தொண்டை, மார்பகத்தில் வலி ஏற்படும். நெல்லி சாறுடன் தேன் சேர்த்து சாப்பிடும்போது விக்கல் அடங்கி போகும்.

Post a Comment

0 Comments